பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு


பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு
x

சென்னை மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டுவிட்டு பறக்கும் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண் மயங்கி விழுந்து பலியானார். மூச்சுத்திணறல் காரணமா? என்று ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

கடலூரை சேர்ந்தவர் மோனிஷா (வயது 24). இவர், சென்னை திருவான்மியூரில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மோனிஷா தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

அப்போது மோனிஷா, மெரினா கடற்கரையில் உள்ள கடை ஒன்றில் பானிபூரி, சுண்டல் வாங்கி சாப்பிட்டார். பின்னர் அவர்கள் கடற்கரை மணலில் நடந்தபடி திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரெயிலில் மோனிஷா மற்றும் அவரது தோழிகள் ஏறிச்சென்றனர்.

மயங்கி விழுந்து சாவு

மயிலாப்பூர் ரெயில் நிலையம் வந்தபோது ஓடும் ரெயிலில் மோனிஷா திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். மோனிஷா உடன் வந்த தோழிகளில் ஒருவர் நர்சு என்பதால் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனாலும், மோனிஷா மயக்க நிலையில் இருந்து மீளவில்லை.

இதனால், பதற்றம் அடைந்த மோனிஷாவின் தோழிகளும், நண்பர்களும் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோனிஷா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோனிஷாவின் தோழிகளிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "மெரினா கடற்கரையில் மோனிஷா எங்களுடன் சேர்ந்து பானிபூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றை சாப்பிட்டார். அதில் இருந்தே அவர் சோர்வாக இருந்தார். ரெயிலில் ஏறிய சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்து பலியானதாக"் தெரிவித்தனர்.

மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் மற்றும் சோளம் ஆகியவற்றை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோனிஷா இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்ற ேகாணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மோனிஷா இறந்தது தொடர்பாக கடலூரில் உள்ள அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

மூச்சுத்திணறல்?

இதுகுறித்து, ரெயில்வே போலீசார் கூறும்போது, "ரெயில் வந்துவிட்டது என்று கூறி மோனிஷா நண்பர்களுடன் வேகமாக படிகளில் ஏறிச்சென்று ரெயிலை பிடித்துள்ளார். அப்போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என கருதுகிறோம். மோனிஷா உடன் பானிபூரி சாப்பிட்ட அவரது தோழிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவரது சாவுக்கான முழு விவரமும் தெரியும்" என்றனர்.


Next Story