வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக்கொலை
வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்யும்படி அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்த வாலிபர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
மதுரை,
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி, பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகள் அபர்ணா (வயது19). மதுரை விராட்டிபத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (23), கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அபர்ணாவை காதலித்து வந்துள்ளார். அபர்ணா அவரை காதலித்ததாகவும், பின்னர் காதலை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஹரிகரன் அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஹரிகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி வீட்டில் உள்ளவர்களிடம் அபர்ணா கூறி இருக்கிறார்.
வீடு புகுந்து கொடூரக்கொலை
எனவே பாண்டி தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தார். அதன்படி முனீஸ்வரன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து, அவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதை அறிந்த ஹரிகரன் ஆத்திரம் அடைந்தார். நான் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்து, நேற்று மதியம் அபர்ணா வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில் அவரது பெற்றோர் கடைக்கு சென்று இருந்ததால் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அபர்ணாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தகராறு செய்தார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும், குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு வெளியே வந்தார்.
மோட்டார் சைக்கிளில் தப்பினார்
அப்போது வீட்டிற்கு அபர்ணாவின் தாயாரும், சித்தப்பாவும் வந்துள்ளனர். அவர்கள் ஹரிகரன் தங்கள் வீட்டில் இருந்து ஓடியதை பார்த்து அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அவர்களை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.
உடனே அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு அபர்ணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.