கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பிணமாக மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
விவசாயம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோக்குடி கிராமத்தை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் மகள் ஹெல்வீனா ஷைனி (வயது 18). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு தனது தந்தை தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையுடன் சேர்ந்து அதே கிராமத்தில் உள்ள வனத்து சின்னப்பர் கோவில் அருகே உள்ள அவர்களது நிலத்தில் காய்கறிகளை பறிக்க சென்றுள்ளார்.
மதியத்திற்கு மேல் பறித்த காய்கறிகளை திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு அனுப்ப வேண்டும் என அவரது தந்தை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பிணமாக மீட்பு
ஆனால் மாலை 6 மணி வரை அவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை லாரன்ஸ் மீண்டும் வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவருக்கு சொந்தமான கிணற்றில் மகளின் துப்பட்டா மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அரியலூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் பல மணி நேர தேடலுக்கு பின்னும் ஹெல்வீனா ஷைனி உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, 2-வது நாளான நேற்று தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடுதல் நடத்தினர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹெல்வீனா ஷைனி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஹெல்வீனா ஷைனி கிணற்றில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது.