கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் பட்டதாரி இளம்பெண் தஞ்சம்
கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் பட்டதாரி இளம்பெண் தஞ்சம்
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி வண்ணான்விளையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 42). இவருடைய மகள் ராஜேஸ்வரி. பி.காம் பட்டதாரியான இவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்றவர் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் வீடு உள்பட அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இதுபற்றி முத்துகிருஷ்ணன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் ராஜேஸ்வரி தனது காதலனான ஆப்பிக்கோடு குழிக்காட்டுவிளையைச் சேர்ந்த வெனிஸ் (22) என்பவருடன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி ஆப்பிக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இவரையும் சேர்த்து வைத்து அனுப்பினர்.