இருதரப்பினர் மோதலில் கை விரலை கடித்து துப்பிய வாலிபர்
ஆம்பூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது வாலிபர் கை விரலை கடித்து துப்பினார்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதி இளைஞர்கள் சிலர் பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளனர். இதில் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். ஒரு தரப்பை சேர்ந்த பார்த்திபன் (வயது 26) என்பவர் மற்றொரு தரப்பை சேர்ந்த விமல் (24), அவரது தம்பி வசந்தகுமார் (23) ஆகியோரை கையை நீட்டி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விமல், பார்த்திபனின் கை விரலை கடித்து துப்பியுள்ளார். இதில் வலியால் கதறிய பார்த்திபனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.