நாயை தலைகீழாக ஸ்கூட்டரில் தூக்கி செல்லும் வாலிபர்
பழனியில் நாயை தலைகீழாக ஸ்கூட்டரில் வாலிபர் தூக்கி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி வைரலாக பரவியது.
பழனி நகரின் மையப் பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தநிலையில் காந்தி மார்க்கெட் சாலையில் இருந்து பெரியகடைவீதி நோக்கி ஒரு ஸ்கூட்டரில் நாயை தலைகீழாக வாலிபர் தூக்கி செல்வது போன்ற வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில், ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி செல்கிறார். பின்னால் அமர்ந்திருக்கும் மற்றொரு வாலிபர், அந்த நாயின் பின்னங்கால்களை பிடித்து தலைகீழாக தொங்க விட்டபடி செல்கிறார். நாயை கொடுமைப்படுத்துவது போன்ற இந்த செயலுக்கு பொதுமக்கள், விலங்குகள் நல அமைப்பினர் என பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இந்த வீடியோவை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.