மயிலாடும்பாறை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
மயிலாடும்பாறை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டனர்.
விழுப்புரம் சிவன்படை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 22). ஆறுமுகம், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உப்புத்துறையில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு அவ்வப்போது சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம், தனது மகன் வெங்கடேசனுடன் உப்புத்துறை கருப்பசாமி கோவிலுக்கு வந்தார்.
தரிசனம் முடிந்தபிறகு தந்தையும், மகனும் கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று எழுந்த வெங்கடேசன், அங்குள்ள தனியார் தோட்டத்துக்குள் ஓடினார். இதனால் திடுக்கிட்டு எழுந்த ஆறுமுகம், தனது மகனை பின்தொடர்ந்து சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழ கிணற்றில் வெங்கடேசன் குதித்தார். அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் உள்ள நிலையில், நீச்சல் தெரியாததால் வெங்கடேசன் நீரில் மூழ்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மயிலாடும்பாறை போலீசார் மற்றும் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் கிணற்றில் குதித்த வெங்கடேசனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.