பெரியகுளம் அருகே விபத்தில் வாலிபர் பலி
பெரியகுளம் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை காந்திஜிநகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த 13-ந்தேதி மோட்டார் சைக்கிளில் பெரியகுளத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இ.புதுக்கோட்டை நோக்கி 2 பேரும் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரகாஷ் ஓட்டினார். ராஜேஷ் பின்னால்அமர்ந்து வந்தார்.
முருகமலை சாலை பகுதியில் அவர்கள் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்தது. இதில், அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து ராஜேஷ் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.