கோவில் திருவிழாவில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; உறவினர்கள் சாலை மறியல்


கோவில் திருவிழாவில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2023 2:30 AM IST (Updated: 5 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

சின்னமனூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஜக்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் இரவு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

இரவு 10 மணி அளவில் கோவில் அருகில் ஊர்வலம் வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு வாலிபரை, 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தாக்கியது. மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அந்த வாலிபரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே கும்பல் தாக்கியதில் நிலைகுலைந்த வாலிபர் சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உயிருக்கு போராடிய வாலிபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தாக்கப்பட்ட வாலிபர் சின்னமனூர் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் சாமிநாதன் (வயது 35) என்பதும், முன்விரோதம் காரணமாக அவரை அந்த கும்பல் தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சாமிநாதனை அரிவாளால் வெட்டிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று அவரது உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குமுளி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்துவிடுவோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாமிநாதனின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

14 பேர் மீது வழக்கு

பின்னர் சாமிநாதனை தாக்கியதாக சின்னமனூரை சேர்ந்த சந்தனகாளை, சூர்யபிரகாஷ், சந்தோஷ், பழனிக்குமார், நாகஜெயராம், குபேந்திரன், பாண்டி, பிச்சிஓண்டி, பால்பாண்டி, செந்தில் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் சின்னமனூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story