வேடசந்தூர் அருகே மதுபாட்டிலால் வாலிபர் குத்திக்கொலை; தொழிலாளி கைது


வேடசந்தூர் அருகே மதுபாட்டிலால் வாலிபர் குத்திக்கொலை; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 May 2023 2:00 AM IST (Updated: 17 May 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மதுபாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே மதுபாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 29). இவருக்கும், கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வரும் அப்பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் 37 வயது அக்காள், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு அவர் தனியாக வசித்து வந்தார். அப்போது அவர் பணியாற்றிய மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் தொழிலாளியாக வேலை செய்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த கணேசமூர்த்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து கணேசமூர்த்தி, தனது காதலியுடன் மதுரைக்கு சென்று, அங்கு வாடகை வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தார். கணேசமூர்த்தி அங்கு பெயிண்டர் வேலைக்கு சென்றார். அவரது கள்ளக்காதலி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

மதுபோதையில் தகராறு

இந்தநிலையில் கணேசமூர்த்தி அடிக்கடி மதுகுடித்துவிட்டு, தன்னுடன் வசித்து வரும் காதலியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண், கோபித்துக்கொண்டு தேவநாயக்கன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கு வந்த அவர் தனது தங்கையிடமும், காளிதாசிடமும் கணேசமூர்த்தி மதுபோதையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே கணேசமூர்த்தி தனது காதலியிடம் சமாதானம் பேசுவதற்காக நேற்று முன்தினம் இரவு தேவநாயக்கன்பட்டிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த காளிதாஸ், அவரை மதுகுடித்துவிட்டு பேசலாம் என்று கூறி தனது மோட்டார் சைக்கிளில் பூத்தம்பட்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் மது அருந்தினர்.

அப்போது காளிதாஸ், கணேசமூர்த்தியிடம் காதலியை கொடுமைப்படுத்தியது குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், தகராறு செய்தார். சிறிது நேரத்தில் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கிவிட்டனர்.

குத்திக்கொலை

இதற்கிடையே கணேசமூர்த்தி, தனது காதலிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தன்னை காளிதாஸ் தாக்கியதாக கூறினார். இதனால் அவர் அங்கிருந்து பூத்தம்பட்டி டாஸ்மாக் கடை பகுதிக்கு வாடகை ஆம்னி வேனில் வந்தார். பின்னர் அவர், காளிதாசை ஆம்னி வேனில் அமர வைத்து பேசிக்கொண்டிருந்தார். அருகில் கணேசமூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கணேசமூர்த்தி, மதுபாட்டிலை உடைத்து ஆம்னி வேனுக்குள் அமர்ந்திருந்த காளிதாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த காளிதாஸ் ரத்தம் சொட்ட சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அங்கிருந்து கணேசமூர்த்தி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கணேசமூர்த்தியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை விட்டல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த கணேசமூர்த்தியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக அவரிடம் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story