வாய்க்காலுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் நாரைக்கால் ஏரிக்கரையோரம் உள்ள வாய்க்காலில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாட்டார்மங்கலம் தெற்குதெரு பகுதியை சேர்ந்த தமிழன் மகன் தர்மா(வயது 20) என்பதும் அதே பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தும்,தெரியவந்தது. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சாவில் சந்தேகம்
இதனால் சந்தேகம் அடைந்த தர்மாவின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்த நிலையில்தான் நாரைக்கால் ஏரிக்கரையோரம் உள்ள வாய்க்காலில் தர்மா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது தொியவந்துள்ளது. இதையடுத்து தர்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக தர்மாவின் தந்தை தமிழன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மன் எவ்வாறு இறந்தார்? அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து உடலை வாய்க்காலுக்குள் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.