திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு வேலை கேட்டு பட்டதாரி வாலிபர் மறியல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு வேலை கேட்டு பட்டதாரி வாலிபர் மறியலில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேற்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், படித்து வேலையில்லாத இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதேபோல் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான மணிகண்டன் (வயது 24) என்பவரும் முகாமில் பங்கேற்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மணிகண்டன், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டார். அங்கு அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அவர், கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனால் திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட வைத்தனர். இதற்கிடையே மறியல் பற்றி அறிந்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கருணாகரன் அங்கு வந்து விசாரித்தார். அப்போது மணிகண்டன் தனக்கு ஜவுளி கடையிலாவது வேலை வாங்கி தாருங்கள் என்று மன்றாடினார். இதையடுத்து திண்டுக்கல் அல்லது பழனியில் உள்ள ஏதாவது ஜவுளி கடையில் வேலைக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மணிகண்டன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த மறியல் சம்பவத்தால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.