விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் பெண்களிடம் அத்துமீறிய குடிபோதை ஆசாமிக்கு தர்மஅடி


விழுப்புரம் அருகே    ஓடும் ரெயிலில் பெண்களிடம் அத்துமீறிய குடிபோதை ஆசாமிக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறிய குடிபோதை ஆசாமிக்கு சக பயணிகள் தர்மஅடி கொடுத்தனர்.

விழுப்புரம்


சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் இரவு 11.30 மணியளவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்தார்.

அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகள் சிலரிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சக பயணிகள், இதுகுறித்து அந்த ரெயிலில் பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள், அந்த போதை ஆசாமிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர், அடுத்தடுத்த ரெயில் பெட்டிகளுக்குச்சென்று மற்ற பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார்.

தர்மஅடி

இதையறிந்ததும் அந்த ரெயில் பெட்டிக்கு வந்து தட்டிக்கேட்ட ரெயில்வே ஊழியர்களை அந்த குடிபோதை ஆசாமி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயணிகள் அந்த போதை ஆசாமிக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் தொடர்ந்து அவர் ரெயில் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே அந்த ரெயில் நள்ளிரவு 12 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது ரெயில்வே ஊழியர்கள், அவரை ரெயிலில் இருந்து கீழே இறக்கி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வளவு ரகளையின்போதும் அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யாரும் வந்து இதனை தட்டிக்கேட்கவில்லை என பயணிகள் வேதனையடைந்தனர்.


Next Story