பழனியில் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி
பழனியில் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தனது கையில் பெட்ரோல் கேன் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் திடீரென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பிறகு அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த காசிராஜன் மகன் ராஜமாணிக்கம் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்கள் பழனி காரமடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது உடுமலையில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். மேலும் பழனியில் பணியாற்றிய ஓட்டலில் எனக்கு சம்பள பாக்கி உள்ளது. அதை கேட்டபோது ஓட்டல் நிர்வாகத்தினர் தரமறுத்துவிட்டனர். இதனால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக அவர் தெரிவித்தார்.
பின்னர் ஓட்டல் நிர்வாகத்தினரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேசினர். அதில், உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் இதுபோன்று தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று கூறி ராஜமாணிக்கத்தை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் பழனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.