கருக்கலைப்பு செய்த இளம்பெண் திடீர் சாவு
கருக்கலைப்பு செய்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் உள்ள எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி தங்கமுனியம்மாள் (வயது 34). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கர்ப்பம் அடைந்தார். பின்னர் 8 மாதம் ஆன நிலையில் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தங்க முனியம்மாள் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த போது மருத்துவ குழுவினர் கருக்கலைப்பு செய்துவிட ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அதன் பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு தங்க முனியம்மாளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் அதிகாலை 5 மணிக்கு தங்கமுனியம்மாள் திடீரென இறந்தார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.