காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம்
ஈரோடு ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் ஈரோடு ரெயில்வேயில் என்ஜின் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பாண்டியன் வீதியை சேர்ந்த திவ்யா (வயது 25) என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின்னர் நவநீதகிருஷ்ணன் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டி திவ்யாவின் பெற்றோர் ரூ.3½ லட்சமும், திவ்யாவுக்கு 10 பவுன் நகை மற்றும் நவநீதகிருஷ்ணனுக்கு 3 பவுன் நகையும் கொடுத்துள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
நவநீதகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து திவ்யா தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.
பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திவ்யாவின் பெற்றோர் உறவினர்களுடன் ஈரோடு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், 'தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது. என் மகளின் கணவர் மற்றும் அவரது தாயார் என் மகளை கொடுமைப்படுத்தியதால் தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
எனவே விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திவ்யாவுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.