காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி அருகே காதலிக்கமறுத்த இளம்பெண்ணை ஆட்டோவை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி அருகே காதலிக்கமறுத்த இளம்பெண்ணை ஆட்டோவை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
இளம்பெண்
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் பிரிசிலா என்ற பிரியா (வயது 19). இவர் ஏரலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் கடையின் ஆட்டோவில் வேலைக்கு சென்று விட்டு வருவது வழக்கம். இவரிடம் திருமலைபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் கருப்பசாமி தன்னை காதலிக்குமாறு அடிக்கடி கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரிசிலா இதை ஏற்கவில்லையாம்.
காதலிக்க மறுத்ததால்...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு ஆட்டோவில் திருமலையாபுரம் பகுதியில் வந்த போது, திருமலையாபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் கருப்பசாமி என்பவர் ஆட்டோவை வழிமறித்தாராம். அவர் பிரிசிலாவை தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தினாராம். ஆனால் பிரிசிலா எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினாராம். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் கருப்பசாமி தப்பி சென்று விட்டாராம். இதில் காயம் அடைந்த பிரிசிலா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
வாலிபருக்கு வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடிவருகின்றனர்.
ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை காதலிக்க மறுத்ததால் வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கருப்பசாமி மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.