சாராய கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
விருத்தாசலம் பகுதியில் சாராய கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று பனையாந்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த இளவரசன் மகன் சரவணன் (வயது 27) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
தடுப்பு காவல் சட்டம்
கைதான சரவணன் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 8 சாராய வழக்குகளும், சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு சாராய வழக்கும் என மொத்தம் 9 சாராய வழக்குகள் உள்ளன. இதனால் சரவணன், தொடர்ந்து சாராய கடத்தலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், சரவணனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரவணனிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.