ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
x

பூதப்பாண்டி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

நாகர்கோவில் பெருவிளை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவருடைய மனைவி மேரிகலா (வயது 32). சம்பவத்தன்று இவர், பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் காந்திநகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர், அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சிறமடம் பகுதியில் வந்தபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்து கொண்டிருந்தார். அந்த நபர் திடீரென மேரிகலாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறிக்க முயன்றார். இதில் நகை அறுந்து 4½ பவுன் மர்ம நபர் கையிலும், மீதி நகை மேரிகலாவின் கையிலும் கிடைத்தது. இதையடுத்து 4½ பவுன் நகையுடன் மர்ம நபர் தப்பிச் சென்றான்.

தனிப்படை அமைப்பு

பின்னர், இதுகுறித்து மேரிகலா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் மண்டைக்காடு பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தக்கலை முட்டைகாடு பகுதியை சேர்ந்த சிபு(33) என்பதும், பூதப்பாண்டி சிறமடம் பகுதியில் மேரிகலாவிடம் 4½ பவுன் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சிபுவை கைது செய்து அவரிடம் இருந்து 4½ பவுன் நகையை மீட்டனர். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story