கயத்தாறு அருகேவிவசாய சங்க நிர்வாகிகொலையில் வாலிபர் கைது
கயத்தாறு அருகேவிவசாய சங்க நிர்வாகிகொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே விவசாய சங்க நிர்வாகியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
படுகொலை
கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரி என்ற கோடாங்கி மாரியப்பன். இவர் ம.தி.மு.க. விவசாய அணி ஒன்றிய செயலாளராகவும், தென்னக மானாவாரி விவசாயி அணி மாவட்ட துணைச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தோட்டத்தில் பயிரிட்டுள்ள சோளம் பயிரை பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அரிவாளால் வெட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
காரணம் என்ன?
இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், கழுகுமலை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட கோடாங்கி மாரியப்பனுக்கும், வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பூல்பாண்டி என்பவரின் மகன் காளிப்பாண்டி (வயது 25) என்பவருக்கும் இடையே தோட்டத்தை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிைலயில் காளிப்பாண்டி கூட்டாளிகள் சிலருடன் சென்று, தோட்டத்தில் இருந்த மாரியப்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
வாலிபர் கைது
இதை தொடர்ந்து இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காளிப்பாண்டியை நேற்று தனிப்படை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், மேலும் சிலரை தேடிவருகின்றனர்.