அழகர்கோவிலுக்கு வந்த பெண்ணை கொன்று நகை பறித்த வாலிபர் கைது
மதுரை அழகர்கோவிலுக்கு வந்த பெண்ணை கொன்று நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அழகர்கோவிலுக்கு வந்த பெண்ணை கொன்று நகை பறித்த வாலிபரை போலீசார் கைது ெசய்தனர்.
தனிப்படை
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கரும்பாறை பகுதியில் உள்ள கன்னிமார் கோவில் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அப்பன் திருப்பதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மூதாட்டியை கொலை செய்தவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
கண்காணிப்பு கேமராக்களில், மூதாட்டியை வாலிபர் ஒருவர் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து அந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர், வாடிப்பட்டி தாலுகா கட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 28) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்தான், மூதாட்டியை தனியாக அழைத்து சென்று காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றிற்காக அவரை கொலை செய்ததாக கருப்பையா ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த நகை, பணத்தை மீட்டனர். இந்த வழக்கில் கொலையான மூதாட்டி யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.