காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கே.வி.குப்பம்
காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே வடுகந்தாங்கல் பகுதியில் உள்ள கீழ்முட்டுக்கூரில் கடந்த 17-ந் தேதி பொங்கலையொட்டி காளை விடும் விழா நடந்தது. இதனை பார்ப்பதற்காக பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் ஊராட்சி புத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் மகன் வெங்கடேசன் (வயது 24) வந்திருந்தார். வெங்கடேசனின் தாயார் சாவித்ரி கொத்தூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் காளை விடும் விழாவின்போது வேகமாக ஓடி வந்த காளைகள் முட்டியதில் வெங்கடேசன் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இவர்களில் வெங்கடேசனுக்கு தலை, தொண்டை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான வெங்கடேசன் லேப் டெக்னீசியனாக பணியாற்றினார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர்.