ஆதார், வங்கி கணக்கு இணைப்பு, நில விவரங்களை 30-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்
பி.எம். கிசான் தவணைத்தொகையை தொடர்ந்து பெற ஆதார், வங்கி கணக்கு இணைப்பு, நில விவரங்களை 30-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 14-வது தவணை நிதி விரைவில் விடுவிக்கப்பட உள்ளது.
14-வது தவணை தொகையானது வருகிற 30-ந் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டது.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளியின் நில விவரங்கள் பதிவேற்றம் 2 ஆயிரத்து 224 பேரும், ஆதார் எண் உறுதி செய்தல் 24 ஆயிரத்து 60 பேரும், வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைத்தல் 16 ஆயிரத்து 86 பேரும், நேரடி பணபரிமாற்றம் செய்ய ஒப்புதல் செய்தல் 886 பேரும் செய்யாமல் உள்ளார்கள்.
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை தங்கள் பகுதி இ-சேவை மையத்திலும், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு மற்றும் நேரடி இணைப்பு பதிவு பணியினை உரிய வங்கியிலும் மற்றும் நில விவரங்கள் பதிவினை தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை களப்பணியாளர்களிடம் உரிய ஆவணங்களுடன் வழங்கி பதிவேற்றத்தினை வருகிற 30-ந் தேதிக்குள் முடித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே மேற்படி பணிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து அடுத்தடுத்து தவணைகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.