வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் விவரங்கள் இணைப்பு
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் அடையாள அட்டை
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப்பதிவு, பல இடங்களில் பதிவு போன்றவற்றை தவிர்க்க முடியும் என்றும், வாக்காளர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆதார் எண் விவரங்களை பெறவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்படும்.
இப்பணி வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. வாக்காளர்கள் அவர்களின் ஆதார் எண் விவரங்களை 6B என்ற படிவத்தை பயன்படுத்தி அளிக்க வேண்டும்.
இ-சேவை மையங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வருவாய் கோட்ட அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் ஆதார் எண் விவரங்களை அளிக்கலாம். ஆதார் எண் இல்லையெனில் படிவம் 6Bல் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் விவரங்களை அளிக்கலாம்.
ஆதார் எண் விவரங்கள்
வருகிற செப்டம்பர் மாதத்தில் வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் சிறப்பு முகாம்களிலும் படிவம் 6B அளிக்கலாம்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்றும் வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய செயலிகள் மூலமாகவும் ஆதார் விவரங்களை வாக்காளர்கள் அளிக்கலாம். மேலும் ஆதார் எண் விவரங்களை அளிக்குமாறு எந்த ஒரு வாக்காளரையும் கட்டாயப்படுத்தப்படமாட்டாது. அனைத்து அரசு துறைகள் மூலமாக இப்பணி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
எனவே சுய விருப்பத்தின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் அவர்களின் ஆதார் எண் விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.