ஆதார் சேவை மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
கலெக்டர் அலுவலக வளாக கழிவறை அருகே உள்ள ஆதார் சேவை மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கலெக்டர் அலுவலக அனுமதியோடு ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆதார் கார்டு எடுப்பது, பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், போட்டோ மாற்றம், கைரேகை உள்ளிட்டவை மாற்றம், முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம், அதே கட்டிடத்தின் பின்பகுதியில் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட அந்த கட்டிடத்தின் ஓரத்தில் பொதுகழிவறையும் உள்ளது. பொதுமக்கள் அந்த கழிவறை வழியாகத்தான் ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் போது பொதுமக்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்கின்றனர். திடீர் என மாற்றப்பட்டதால் பெரும்பாலான மக்களுக்கு ஆதார் மையம் செயல்படுவது தெரியவில்லை.தொலைத்தூரங்களில் இருந்து வந்து பார்த்துவிட்டு, சிலர் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. ஆதார் சேவை மையத்தில் மிக முக்கியமாக நோயாளிகள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள், சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள். இதன்காரணமாக கழிவறை துர்நாற்றத்தில் செல்ல நேரிடுகிறது. மேலும் அந்த கழிவறை அருகேயே காத்திருக்கும் நிலையும் உள்ளது. எனவே இந்த மையத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்வதுடன், நிரந்தர கட்டிடத்தில் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.