7½ லட்சம் பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு


7½ லட்சம் பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 690 பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 690 பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

பாராட்டு சான்றிதழ்

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் 100 சதவீத ஆதார் எண்ணை இணைக்கும் பணியை முழுமையாக மேற்கொண்ட 2 வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தம்பிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ரங்கசாமி, ஊட்டமலை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைஆசிரியர் சின்னபையன் ஆகியோருக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலுடன் 100 சதவீத ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள் தாமாக முன்வந்து உடனடியாக இணைக்க முன்வர வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் இல்லம் தேடி சென்று 6 பி படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து பெற்று இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருந்தத்தக்க ஒன்றாகும்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 12 லட்சத்து 54 ஆயிரத்து 804 வாக்காளர்களில் இன்று (19.09.2022) வரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 690 வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 60 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர். இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஒருசில பகுதிகளில் இப்பணிகள் 10 சதவிதத்திற்கும் குறைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

இதன்படி, மிக குறைந்த அளவிலான சதவிகித்தில் இப்பணி நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தார் சவுகத் அலி மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story