ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும்


ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கிசான் பயனாளிகள் தவணை பெற ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என மயிலாடுதுறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை

பிரதம மந்திரி கிசான் பயனாளிகள் தவணை பெற ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என மயிலாடுதுறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டம்

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என்று 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பது அவசியம் ஆகும்.

பி.எம். கிசான் இணையதளத்தில்

நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய உள்ள காலத்திற்கான தவணை தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

எனவே பி.எம்.கிசான் தவணை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story