மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஊஞ்சல் உற்சவம்
இதை தொடர்ந்து, உற்சவ அம்மன் பவானி அம்மன் அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மன் பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார்.
ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 12 மணியளவில் தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போலீஸ் கெடுபிடி
முன்னதாக பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பக்தர்களிடம் அதிகம் கெடுபிடி காண்பித்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.