அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா


அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளி விழா

ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள அரியாத்தம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் திரளான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் அருந்ததி பாளையம் பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் பூங்கரகம் ஜோடித்து நகரில் முக்கிய வீதி வழியாக வலம் வந்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி ஏந்தி உடன் சென்றனர்.

கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

கொசப்பாளையம் பகுதியில் உள்ள வினை தீர்க்கும் முத்துமாரியம்மன் கோவில், காந்தி ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில், பள்ளிக்கூடம் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், காஜிவாடி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், ஆண்டாள் அம்மன் கோவில் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் நகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே சு.பொலக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உட்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மனுக்கு மலர்மாலைகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா நடந்தது.

இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்ற பக்தரின் மார்பு மீது உரல் வைத்து, அதில் அரிசி, மஞ்சள் கொட்டி உலக்கையால் இடிக்கப்பட்டது.

பின்னர் இடிக்கப்பட்ட மாவு திருமணம் ஆகாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கும் வழங்கப்பட்டது.

இரவு கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியும், கோவில் முன்புறம் நாடகமும் நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குப்புஜெயக்குமார், துணைத் தலைவர் உமாதங்கராசு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே பெரிய கொழப்பலூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழா நடந்தது. இதில் கோவில் முன்பு பொங்கல் வைத்து, மா விளக்கு செய்து பின்னர் கெங்கையம்மனுக்கு படையலிட்டனர். இரவு கெங்கையம்மன் புஷ்பவாகனத்தில் வீதி உலா நடந்தது.


Next Story