கோவில்களில் ஆடி கிருத்திகை விழா
நாட்டறம்பள்ளி அருகே கோவில்களில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில் உள்ள சென்றாயசாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர் ஒருவர் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி 3 முறை சுற்றி வந்தார். முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.
நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஆம்பூரை அடுத்த கைலாசகிரியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.