அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி விழா
வேலூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஆடி வெள்ளி விழா
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு வாழைமரங்களாலும், வஞ்சூர் வஞ்சியம்மன் கோவிலில் ஏலக்காய்களாலும், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் மஞ்சள்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில்
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
மேலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூழ்வார்த்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எல்லையம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் சுண்ணாம்பு கால்வாய் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஜூஸ்பாட்டில், மஞ்சள் காப்பு அலங்காரம், கூழ்வார்த்தல், பொங்கல் இடுதல், பூங்கரகம், வீதி உலா ஆகியவை நடைபெற்றது. வணிகர் வீதியில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி, கிரேன் எந்திரம் மூலம், அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். ஆலங்கநேரி கோட்டை மாரியம்மன் கோவிலில் 3-ம் வெள்ளி திருவிழா வருவதை முன்னிட்டு காப்பு கட்டுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.