சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா
அம்பை சின்ன சங்கரன்கோவிலில் நேற்று ஆடித்தபசு திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்பை:
அம்பை தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோமதியம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தபசுத்திருநாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி தபசு மண்டபத்துக்கு சென்றார். மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அம்பை புதுக்கிராமம் தெருவில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், 10 மணிக்கு சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் முருகசுவாமிநாதன், அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் சங்கு சபாபதி ஆகியோர் தலைமையில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.