திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சுழி,
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடித்தபசு திருவிழா
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10-ம் நாள் தபசு நிகழ்ச்சியானது திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. துணைமாலை அம்மன் கோபமுற்று தபசு மண்டபத்தில் தவம் மேற்கொண்டதாகவும், அன்று திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மாலை மாற்றும் நிகழ்ச்சி
விழாவில் திருமேனிநாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் நேற்று மாலை நடைபெற்றது. அம்மன் சுவாமியை மூன்று முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு கோவிலைச் சென்றடைந்தனர். திருவிழாவைக் காண திருச்சுழி, அருப்புக்கோட்டை, நரிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.