ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சுவாமி கோவிலில் ஆராட்டு விழா
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சுவாமி மண்டல பூஜையையொட்டி ஆராட்டு விழா, பேட்டை துள்ளல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பனைக்குளம்,
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சுவாமி மண்டல பூஜையையொட்டி ஆராட்டு விழா, பேட்டை துள்ளல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டல பூஜை
ராமநாதபுரத்தை அடுத்த ரெகுநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. சபரிமலைக்கு அடுத்தபடியாக அதே தோற்றத்துடன் அமைந்துள்ள சிறப்பு பெற்றது இந்த கோவில். மேலும் சபரிமலை தலைமை தந்திரியால் திறந்து வைக்கப்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு 18-வது மண்டல பூஜை பேட்டை துள்ளல் மற்றும் ஆராட்டு விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் இங்கு விமரிசையாக நடைபெறுவதால் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
ஆராட்டு விழா, பேட்டை துள்ளல்
விழாவின் 9-ம் நாளான நேற்று பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோபூஜை, கஜ பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து ரெகுநாதபுரம் முத்துநாச்சி அம்மன் கோவிலில் இருந்து பேட்டை துள்ளல் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் உடலில் வர்ணம் பூசி ஆடிப்பாடி கையில் வில், வாள், வேல் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதன் பின்னர் குருக்கள் மோகன் குருசாமி தலைமையில் பஸ்ம குளத்தில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு 33 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.
அதன் பின்னர் கோவிலில் இருந்து அய்யப்ப சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி கோவில் மற்றும் ரெகுநாதபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். அனைவரும் குருசுவாமியிடம் ஆசி பெற்றனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்த விழாவில் வி.எல்.ஸ்டோர் ஆதிகேசவன், குண்டூரணி நாகு, தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய அணி துணை செயலாளர் செல்வக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உடையத்தேவர், ரெகுநாதபுரம் முனியசாமி, வாலாந்தரவை ஊராட்சி செயலர் அர்ஜுனன், பா.ஜ.க. மேற்கு ஒன்றிய துணை தலைவர் முத்துக்குமார், மாவட்டக்கொட்டான் செல்வம், சூரங்கோட்டை அன்பரசு, முனியசாமி, தேர்போகி ஊராட்சி செயலர் வினோத் கண்ணன், தனம் டிராவல்ஸ் கணேஷ்குமார், ரிச்லுக் டெய்லர் சமயராஜ், டிரைவர் நாகராஜன், ஏ.பி.எஸ். பைனான்ஸ் முருகன், சீதாராமன், பகவதி அம்மா லாரி சர்வீஸ் அர்ஜுனன், சுரேஷ்குமார், கணேசன், திருச்செந்தூர் முருகன் லாரி சர்வீஸ் முருகதாஸ், பாலாஜி ஆப்செட் கவியரசன், விடுதி காப்பாளர்கள் அர்ஜுனன், தியாகராஜன், ராஜ், பழனி, கமுதி ராம்கோ மேலாளர் வாசு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இருமுடிகட்டுதல்
வருகிற 31-ந்தேதி காலை இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு பஜனை மற்றும் அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் சபரிமலை யாத்திரை புறப்பட்டு செல்கின்றனர். இதேபோல 5-ந்தேதியும் இங்கிருந்து பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி புறப்பட்டு செல்கின்றனர்.