ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15½ பவுன் நகை அபேஸ்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15½ பவுன் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15½ பவுன் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
15½ பவுன் நகை
வெள்ளிச்சந்தை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பேயோடு சாந்தபுரத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவருடைய மனைவி மேபல் புளோரி (வயது 72). இவர் நேற்று பேயோடு சந்திப்பில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் வைத்திருந்த தனது நகையை வாங்க சென்றார். பின்னர் வங்கியில் வைத்திருந்த 15½ பவுன் நகை, ஒரு வைர நெக்லஸ் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை வாங்கி பையில் வைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு புதுத்துணி வாங்க அரசு பஸ்சில் புறப்பட்டார்.
அண்ணா பஸ் நிலையத்தில் வந்திறங்கிய அவர் செம்மாங்குடி ரோட்டில் உள்ள கடை ஒன்றில் துணி வாங்க சென்றார். அங்கு வைத்து தனது பையை திறந்து பார்த்தார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் எனில் அதிலிருந்த நகை மற்றும் வைர நெக்லசை காணவில்லை. மேலும் பணமும் மாயமாகியிருந்தது.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதனால் செய்வதறியாது திகைத்து போன அவர் உடனடியாக பஸ் நிலையத்துக்கும், அங்கிருந்து தான் நடந்து வந்த பாதையிலும் சென்று நகையையும், பணத்தையும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பஸ்சில் வந்தபோது தனது நகையையும், பணத்தையும் யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றிருக்கலாம் என கருதினார்.
இதைத் தொடர்ந்து அவர் இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் இருந்து மேபல் புளோரி நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் காரணமாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அடிக்கடி சம்பவம்
அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.