ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 26 பவுன் நகை அபேஸ்
களியக்காவிளையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையின் தோள் பையில் இருந்த 26 பவுன் நகை அபேசான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை,
களியக்காவிளையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையின் தோள் பையில் இருந்த 26 பவுன் நகை அபேசான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ஆசிரியை
திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் நிக்கல்சன். இவருடைய மனைவி ஜெயந்தி ஜெனி (வயது62), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் சம்பவத்தன்று 26 பவுன் நகையை தனது தோள் பையில் எடுத்துக்கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தையல் கடைக்கு சென்றார். பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து களியக்காவிளைக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.
களியக்காவிளை கோழிவிளை பகுதியில் சென்ற போது தனது தோள்பையை பார்த்தார். அப்போது அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெண் மீது சந்தேகம்
இதுகுறித்து ஜெயந்தி ஜெனி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தி ஜெனி மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நிற்கும் போது தோள்பையில் நகை இருந்துள்ளது. அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் நடவடிக்கை மீது இவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பஸ் ஏறி களியக்காவிளை வந்த போது நகையை காணவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மார்த்தாண்டம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி நகையை யாராவது திருடி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் ஆசிரியையின் 26 பவுன் நகை அபேசான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.