மாற்றுத்திறனாளி காரில் கடத்தல்; 4 பேர் கைது


மாற்றுத்திறனாளி காரில் கடத்தல்; 4 பேர் கைது
x

நெல்லையில் மாற்றுத்திறனாளியை காரில் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் அந்தோணிராஜ் (வயது 37). மாற்றுத்திறனாளியான இவர் தன்னுடைய உறவினர்களுக்கு ஆதார் அட்டை திருத்தம் செய்ய ஒரு காரில் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள சேவை மையத்துக்கு வந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணிக்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திடீரென்று 6 பேரும் சேர்ந்து மாணிக்கத்தை தங்களது காரில் ஏற்றி கடத்திச்சென்று விட்டனர். அப்போது மாணிக்கத்துடன் வந்திருந்தவர்கள் கதறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் அந்த கும்பலையும், மாணிக்கத்தையும் போலீசார் பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மாணிக்கம் நெல்லை தாலுகா அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது வேலை வாங்கி தருவது தொடர்பான பிரச்சினையில் அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கத்தை கடத்தியதாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆழ்வார்திருநகரியை சேர்ந்த சந்தனராஜ் (22), கண்ணன் (45), சாரதி (25), முருகன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கடத்தல் சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story