ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு அப்துல்கலாம் பெயர்
ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
ராமேசுவரம் நகராட்சி துணை தலைவராக உள்ள பிச்சை தட்சிணாமூர்த்தி தனது 18-வது வார்டு பகுதியில் மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார். இதனிடையே 18-வது வார்டுக்குட்பட்ட எம்.ஆர்.டி.நகர் பகுதியில் புதிதாக பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை நகராட்சி துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது நகராட்சி முன்னாள் தலைவர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது குறித்து நகராட்சி துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-
ராமேசுவரம் 18-வது வார்டுக்குட்பட்ட முத்துராமலிங்க தேவர் நகர் பகுதியில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு பகுதியில் உள்ள மக்களின் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் தீயணைப்பு நிலையம் அலுவலகம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக 2 ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டு அங்கிருந்து மக்களுக்கு தேவையான குடிதண்ணீர் சீராக வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
புதிய ரேஷன் கடை
18-வது வார்டுக்குட்பட்ட எம்.ஆர்.டி.நகர் பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் ரேஷன் கடை கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. அதனால் எம்.ஆர்.டி.நகர் பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டித் தரவும் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் எதிரே உள்ள குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் கட்டித்தரவும், சிறுவர் பூங்கா அமைத்து தரவும் 18-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் புதிதாக மின்விளக்கு வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகளையும் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் நாசர்கானிடம் கோரிக்கை மனு வைத்து செய்ய திட்டமிட்டுள்ளேன்.
அப்துல்கலாம் பெயர்
அதுபோல் ராமேசுவரம் ரெயில் நிலையம் மற்றும் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் பாலத்திற்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு நகராட்சி தலைவர் நாசர்கான் மூலம் மனு கொடுத்து அதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றும் வருகின்ற நகர்மன்ற கூட்டத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.