வேலூர் தொழிலதிபர் வங்கிக்கணக்கில் ரூ.42½ லட்சம் அபேஸ்
வேலூரில் வெற்று காசோலையை பயன்படுத்தி தொழிலதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42½ லட்சம் அபேஸ் செய்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
வேலூரில் வெற்று காசோலையை பயன்படுத்தி தொழிலதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42½ லட்சம் அபேஸ் செய்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தொழிலதிபர்
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 68). இவருக்கு வேலூரை அடுத்த துத்திப்பட்டில் கல்குவாரி உள்ளது. அதைத்தவிர சொந்தமாக ஏராளமான லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். பிச்சாண்டி வேலூர் அல்லாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். வங்கிக்கு அவர் அடிக்கடி சென்று வந்த சமயத்தில் அங்கு காசாளராக பணியாற்றிய வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த உமாபதியுடன் (53) பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பிச்சாண்டி தனக்கு சொந்தமான சுமார் 15 ஆயிரம் சதுரஅடி நிலத்தை ரூ.1 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், நிலம் வாங்குவதற்கு யாராவது விருப்பம் தெரிவித்தால் இதுபற்றி சொல்லுங்கள் என்று உமாபதியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் அந்த நிலத்தை தனது குடும்பத்தினர் பெயரில் வாங்க விரும்புவதாக கூறினார்.
ரூ.42½ லட்சம் அபேஸ்
அதைத்தொடர்ந்து உமாபதி முதற்கட்டமாக நிலத்துக்கு ரூ.52 லட்சம் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை விரைவில் தயார் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ரூ.52 லட்சம் கொடுத்தற்காக பிச்சாண்டியிடம் இருந்து 3 வெற்று காசோலையை அவரின் கையெழுத்துடன் உமாபதி பெற்றுள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுத்து நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்தவுடன், 3 காசோலையையும் திருப்பி கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உமாபதியால் மீதமுள்ள பணத்தை தயார் செய்து கொடுக்க முடியவில்லை. அதனால் கடந்த 2019-ம் ஆண்டு பிச்சாண்டி ரூ.52 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.63 லட்சமாக உமாபதியிடம் கொடுத்தார். ஆனால் அவரிடம் கொடுத்திருந்த வெற்று காசோலைகளை திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிச்சாண்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42½ லட்சம் திடீரென மாயமானது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் கையெழுத்து போட்டு கொடுத்திருந்த வெற்று காசோலையை உமாபதி பயன்படுத்தி ரூ.42½ லட்சத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.
முன்னாள் வங்கி ஊழியர் கைது
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் போலீசார் உமாபதியை கைது செய்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு வங்கியில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி உமாபதி பலரிடம் பல லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன்பேரில் அவர் 40 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் உமாபதி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.