திருவாமாத்தூர்அபிராமேஸ்வரர் கோவில் தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு சந்திர பிரபை, பூத வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், கயிலாய வாகனம், குதிரை வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணியளவில் விநாயகர் அபிஷேக வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் 9 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் எழுந்தருளினார்.
இந்த தேரை, ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இத்தேர், கோவிலின் மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாமாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குபேரன், சந்திரசேகர சிவாச்சாரியார், அருணாச்சல சிவாச்சாரியார், அர்ச்சகர்கள் மகேஷ் குருக்கள், கிரிதர குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், திருவாமாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.