39 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்; விக்கிரமராஜா வலியுறுத்தல்
39 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
39 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் நெல்லை டவுனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
39 பொருட்களுக்கு செஸ் வரி
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அரிசி, பருப்பு, பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும். அடுத்த கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெற இருக்கிறது. அங்கு வணிகர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போட்டு உள்ளதாக கூறுகிறார்கள். அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்காவிட்டால், நெல்லையில் 15 ஆயிரம் வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் 39 பொருட்களுக்கு புதிதாக செஸ் வரி போட்டு உள்ளனர். அதனை திரும்ப பெற வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைகளை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி உள்ளார். ஆனால் போலீசார் கடைகளை திறக்கவிடாமல் தடை செய்கிறார்கள்.
வருகிற தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நிபந்தனை இன்றி முழு தளர்வுடன் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஆர்.குணசேகரன், பொருளாளர் பன்னீர்செல்வம், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் சாலமோன், மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம் வரவேற்றார். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயலாளர் ராஜ்குமார், நெல்லை மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன், குமரி மண்டல தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ், மாநில பேச்சாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் அசோகன், அருள் இளங்கோ, மாநில இணை செயலாளர் நயன்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில துணை செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார் நன்றி கூறினார்.