பள்ளிகளில் வேலைவாய்ப்பை பதிவு செய்யும் நடைமுறை ரத்து
10ஆம் வகுப்பு , பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பை பதிவு செய்யும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது
சென்னை:
10ஆம் வகுப்பு , பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பை பதிவு செய்யும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது..10, 12-ம் வகுப்புமுடித்த மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வசதி 2011-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது..இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சரின் செயலாளர் III அவர்களால் 6.6.2022 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது.
மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவு அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழ்நிலையாக அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை "இ-சேவை" வாயிலாக செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச்செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.