சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் சக்கரை மனைவி குப்பாயி. இவர் தனது மருமகள் ரஞ்சனிக்கு எதிராக கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனு விசாரணைக்காக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே அந்த மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க குள்ளஞ்சாவடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், குப்பாயி மகன் அய்யப்பனிடம் (வயது 35) லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தொழிலாளியான அய்யப்பன், கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை அய்யப்பன், பாலசுந்தரத்திடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதனால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்தை, பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.