கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது பரிதாபம்:மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வெல்டிங் தொழிலாளி பலி
சேந்தமங்கலம்:
கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வெல்டிங் தொழிலாளி பலியானார்.
வெல்டிங் தொழிலாளி
நாமக்கல் அண்ணா நகரை சேர்ந்தவர் விஷ்வா (வயது 23). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சுவேதா (21). இவர்களுக்கு 1½ மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஷ்வா தனது நண்பர்கள் 3 பேருடன் இரு மோட்டார் சைக்கிள்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது அங்குள்ள 70-வது கொண்டை ஊசி வளைவு அருகே விஷ்வா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் திரும்பியபோது எதிரே கிழங்கு பாரத்தை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த நண்பர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிழங்கு பார லாரியை ஓட்டி வந்த கொல்லிமலை குண்டூர் நாடு ஊராட்சி இலங்கியம்பட்டியை சேர்ந்த டிரைவர் அருண்குமாரை தேடி வருகின்றனர்.