வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
வேன்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
வீ.மேட்டுப்பாளைம்
வெள்ளகோவில் அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். சாமி தரிசனம் செய்து விட்டு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துவிட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமம் பழனிகவுண்டன் வலசை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). இவர் முத்தூரில் சலூன் கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் அரச்சலூர் அருகே உள்ள கே.ஜி.வலசை சேர்ந்த அரசகுமார் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மோட்டார் சைக்களில் பழனிகவுண்டன் வலசு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இவர்களுடைய மோட்டார் சைக்கிள் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வெள்ளகோவில்-முத்தூர் ரோட்டில் மாந்தபுரம் அருகே வந்தது. அப்போது அவர்களுக்கு முன்னால் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென்று திரும்பியது. இதனால் வேனும், மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக்ெகாண்டன. இந்த விபத்தில் வேன் சாலையில் கவிழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக சென்றவர்களும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் பலி
அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அரசகுமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரசகுமாரும் இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான சக்திவேலுக்கு சுமதி என்ற மனைவியும்,பரணி (17),ஹரிஷ் (13) என்ற 2 மகன்களும் உள்ளனர்.