லாரி மோதி விவசாயி சாவு; டிரைவர் கைது


லாரி மோதி விவசாயி சாவு; டிரைவர் கைது
x

லாரி டிரைவர் முனியாண்டி

பட்டுக்கோட்டை அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

விவசாயி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (வயது42). விவசாயி. அதே ஒட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் கோட்டை அரசமாணிக்கம் (57). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்.

நண்பர்களான இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஒட்டங்காடு திரும்பிக்கொண்டு இருந்தனர். கோட்டை அரசமாணிக்கம் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின் இருக்கையில் முத்துகிருஷ்ணன் அமர்ந்து இருந்தார்.

லாரி மோதியது

பட்டுக்கோட்டை கொண்டிகுளம் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டு இருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் கிடங்கிற்கு அரிசி லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் கோட்டை அரசமாணிக்கம் படுகாயம் அடைந்தார்.

பின்னால் அமர்ந்து இருந்த முத்துகிருஷ்ணன், தூக்கி எறியப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

லாரி டிரைவர் கைது

படுகாயம் அடைந்த கோட்டை அரசமாணிக்கம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை குட்டையன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முனியாண்டி (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story