பனமரத்துப்பட்டி அருகே தனியார் பஸ்- டிப்பர் லாரி மோதி விபத்து-டிரைவர், கண்டக்டர் உள்பட 6 பேர் படுகாயம்
பனமரத்துப்பட்டி அருகே தனியார் பஸ்- டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பனமரத்துப்பட்டி:
தனியார் பஸ்
பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் பெரியூர்கல்மேடு பகுதியில் நேற்று காலை 11 மணி அளவில் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தும்பல்பட்டி இரட்டைபுலிபுதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது பனமரத்துப்பட்டியில் இருந்து குரால்நத்தம் நோக்கி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ், லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. விபத்தில் டிப்பர் லாரி டிரைவரான சேலம் செங்கரடு பகுதியை சேர்ந்த துரைமுருகன் (27) என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் இருந்து துரைமுருகனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம்
தனியார் பஸ் டிரைவர் மணிகண்டன், கண்டக்டர் செங்கோட்டையன் (47) மற்றும் பயணிகள் மகேஸ்வரி (45), செல்லம்மாள் (47), செந்தில்குமார் (44) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.