மேச்சேரி அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி
மேச்சேரி அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மேச்சேரி:
தொழிலாளர்கள்
மேச்சேரி அருகே மானத்தாள் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 32) நெசவுத்தொழிலாளி. இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரும் இதே ஊரை சேர்ந்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் (33). தையல் தொழிலாளி. இவருக்கு சாரதா என்ற மனைவியும், ஒருமகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக செந்தில், சதீஷ்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் மேச்சேரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
2 பேர் பலி
அப்போது சந்திரம்மாள் கடை பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சதீஷ்குமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்தார்.
இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.