நாமகிரிப்பேட்டை அருகே சோகம்: தனியார் கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி


நாமகிரிப்பேட்டை அருகே சோகம்: தனியார் கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி
x

நாமகிரிப்பேட்டை அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

ராசிபுரம்:

5-ம் வகுப்பு மாணவன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 10). இவன் ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் காலை செம்மண்காட்டில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தான்.

வழக்கம்போல் நேற்று காலை பிரபாகரன் செம்மண்காடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தான். அப்போது நாரைக்கிணறு பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு தனியார் கல்லூரி பஸ், நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த சமயம் எதிரே லாரி ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பஸ் டிரைவர் பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

பஸ் மோதி பலி

அப்போது நிலைதடுமாறிய பஸ் செம்மண்காடு பஸ் நிறுத்த நிழற்கூடை மீது மோதி, அங்கு நின்று கொண்டிருந்த மாணவன் பிரபாகரன் மீதும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கிருத்திகா, மதுமிதா ஆகிய 2 மாணவிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் பஸ் மோதி பலியான பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் கல்லூரி பஸ் டிரைவர் அன்பழகனை (39) கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை அருகே தனியார் கல்லூரி பஸ் மோதியதில், 5-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story