சாலையில் விழுந்த கைக்குட்டையை எடுக்க சென்றபோது தனியார் பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே சாலையில் விழுந்த கைக்குட்டையை எடுக்க சென்றபோது, தனியார் பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலியானார்.
பிளஸ்-2 மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சதுர்வேதி (வயது 17). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சதுர்வேதி நேற்று தனது தாயாருடன் ஸ்கூட்டரில் தர்மபுரிக்கு வந்தார். பின்னர் அவர்கள் தர்மபுரியில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர். ஸ்கூட்டரை சதுர்வேதி ஓட்டி சென்றார். கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சதுர்வேதியின் கைக்குட்டை சாலையில் விழுந்தது.
பஸ் மோதி பலி
இதனால் ஸ்கூட்டரை நிறுத்திய அவர் சாலை ஓரத்தில் தாயாரை இறக்கி விட்டு விட்டு சாலையில் விழுந்த கைக்குட்டையை எடுப்பதற்கு ஸ்கூட்டரில் திரும்பி சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதுர்வேதி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதுர்வேதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.